முன்னுரை :
'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு'!
என்ற பாவேந்தரின் புரட்சி வரிகளுக்கேற்ப தமிழ் தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்தது. கைச்சைகையாலும் முகப்பாவனையாலும் வெளிப்படுத்திய தம் எண்ணங்களை நம் வாழ்வோடு பின்னிப்பிணைத்து வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல மொழி முக்கியப்பங்கு வகிக்கிறது.
தாய்மொழிக் கல்வியின் தேவை :
தாய் புகட்டிய மொழியில் நாம் அறிவைத் தேடினால் நம் இலட்சியப் பாதையை விரைவிலே அடைந்து விடலாம். அனைத்துத் துறை சார் கல்வியையும் நாம் நம் தாய்மொழி வழியே பயின்றால் புதுமைப் படைப்புகளை எளிதாகவே உருவாக்கி விடலாம். எனவே,
'தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறை தோறும் துடித்தெழுந்தே!'
- என்கிறார் பாவேந்தர்.
தாய் மொழிச் சிந்தனை :
அறிவுக் கடலில் மாணவர்கள் மூழ்கி முத்துக்குளிக்க தாய்மொழியிலேயே சிந்தனை செய்ய வேண்டும். நம் தாய்மொழியிலுள்ள புரிதலும் சிந்தனையும் ஆளுமையும் பிற மொழியில் பயிலும் போது ஏற்படாது.
'தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு,!
- என்கிறார் நாமக்கல் கவிஞர்.
அறிஞர்களின் பார்வை :
அறிவியலாளர்களும், கண்டுபிடிப்பாளர்களும் பயின்றதும் சிந்தித்ததும் படைத்ததும் தம் தாய்வழிக் கல்வியில் தானே! நாம் மட்டுமே பிறமொழிக் கல்வியை உயர்த்தி நம் தாய்மொழியைத் தாழ்த்திப் பேசுகிறோம். அறிஞர்களின் பார்வையில் அவரவர் மொழியில், தம் சிந்தனையில் தோன்றும் புதிய படைப்புகளே மதிப்பிற்குரியதாகும்.
'எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழ் அணங்கே, உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவோம்!"
- என்கிறார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை.
கற்கும் திறன்:
பிற மொழிகளில் கல்வி கற்பதால் மனனம் செய்யும் முறையே பெருகி விட்டது. மதிப்பெண்ணைத் தேடித் தேடி நாம் கற்கும் திறனைத் தொலைத்து விட்டோம். ஏடும் எழுதுகோலும் இல்லாமல் குருவின் ஆசிரமத்திலும் திண்ணைப் பள்ளிகளிலும் கல்வி பயின்ற தமிழர்களின் பரம்பரையே நாம். தம்மைச் சுற்றியுள்ள சூழல்களால் விளக்கப்படும் பாடங்களையும், வாழ்வியல், தத்துவியல். அறிவியல் போன்ற எல்லா துறை சார்ந்த கருத்துகளையும் எளிதாக தம் தாய்வழிக் கல்வியான தமிழிலேயே அறிந்தும் புரிந்தும் கற்றனர்.
"தமிழ் என்று தோள் தட்டி ஆடு - நல்ல தமிழ் வெல்க வெல்க வென்றே தினம் பாடு'
- என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.
பயன் :
குறிக்கோளில்லாது கெட்டேன்' - என்ற விதியின் வழியே செல்லாமல், நம் மதியால் விதியை வெல்லக்கற்றுக் கொள்ள வேண்டும். கல்வியின் பயன் ஒழுக்கம். அறம் முதலியவை ஆகும். அனைத்தையும் கற்றும் கற்றதன்படி வாழ்வில் ஒழுகியும் வாழ்பவனே சான்றோன் ஆகிறான். ஆன்றோர்களும் சான்றோர்களும் காட்டிய அறவழியில் பொருளை ஈட்டி இன்பம் துய்த்தலே கல்வியின் பயனாகும்.
"இனிமை தமிழ்மொழி எமது - எமக்கு இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது''
- என்கிறார் புரட்சிக் கவிஞர்.
இன்றைய நிலை :
போட்டிகளையும் சவால்களையும் மட்டுமே எதிர்கொள்ள இன்றைய கல்வி முறை வாய்ப்பளிக்கிறது. வெற்றியும் தோல்வியும் வேறல்ல. அவற்றின் மூலம் நாம் நிறைய அனுபவங்களை மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும். பரந்த மனப்பான்மையோடும் பொதுநலத் தன்மையோடும் விசாலமான சிந்தனையோடும் வாழ இன்றையக் முறை கற்றுக் கொள்ள வேண்டும்.
"தகத்தாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்"
- பாவேந்தர் பாரதிதாசன்.
முடிவுரை :
நம் எண்ணத்தை வெளியிடுவதற்கும். சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் நம் தாய்மொழியே துணைநிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையை உணர்ந்தவர்களுக்குத் தாய்மொழிக் கல்வியின் தேவையும் பயன்களும் இனிதே புலப்படும்.
இன்பம் எனப்படுதல் - தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக!
என்ற பாரதிதாசனின் வரிகளே தமிழ்மொழியின் அவசியத்தைப் பறைசாற்றுகின்றன.
#கட்டுரை
#வாழ்க்கை_முறை
#pothu_katturai
#tamil_katturai
#tamil_essay
#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips
#essaywriting
#favourite
#essay
#essayforkids
#easyessay
#kidsenglishessay
#கட்டுரை
#சிலவரிகள்கட்டுரை
#குழந்தைகளுக்கான_கட்டுரை
#தாய்மொழிவழிக்கல்வியின்சிறப்புகள்
#கல்வியின்சிறப்புகள்
#tamil
Subscribe to https://youtube.com/c/DaYsEyEKids
Comments
Post a Comment