Tamil கட்டுரை | குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு கட்டுரை | Pothu Katturai

 குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு கட்டுரை

முன்னுரை:

குழந்தைகளுடன் நாம் இருக்க இயலாத நேரங்களிலும் அவர்களைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது என்பது ஒரு சவால் ஆகும். அவர்களுக்கு கல்வி புகட்டுவது மிகவும் முக்கியமானதாகும். குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்புக் கல்வியினை அவர்கள் வீட்டை விட்டு வெளியே தனியாகச் செல்லத் துவங்கும் வயதிலேயே ஆரம்பிப்பது சிறந்ததாகும்.

கவனம்:

குழந்தைகள் தாங்கள் விரும்பிய இடங்களில் சாலைகளின் குறுக்கில் ஓடி களிக்கும் தன்மையுடையவர்கள். சாலைகளிலோ சாலைகளின் குறுக்கிலோ ஓடுதல் கூடாது எனும் உணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் விரைவில் திசை திருப்பப்பட்டு பெற்றோர் கைகளை உதறி விட்டு சாலைகளின் குறுக்கே ஓடிவிடக்கூடிய தன்மையுடையவர்கள். எனவே, அவர்களை கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

வழிமுறைகள்:

போக்குவரத்து குறியீடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளை குழந்தைகள் அறிந்திட உதவ வேண்டும், சரியான குறியீட்டிற்காகக் காத்திருந்து, பாதசாரிகளுக்கான வரிக்குதிரை பாதையின் வழியாகச் சாலையைக் கடந்திட அறிவுறுத்தி சாலைகளில் அங்கும் இங்குமாகவோ, குறுக்காகவோ ஓடுதல் கூடாது என்பதைக்கூறி எச்சரிக்கை செய்ய வேண்டும். சாலைகளில் நடந்து செல்லும்போது நடைபாதையை பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.

சாலை பாதுகாப்பு விளக்குகளைப் பற்றிய கல்வி:

சாலை பாதுகாப்பு விளக்குகளில் இருக்கும்
சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் எவற்றைக் குறிக்கின்றன‌‌ என்பதை பற்றிய தெளிவு குழந்தைகளுக்கு இருத்தல் வேண்டும்.

1) சிவப்பு – நில்

நிறுத்தக் கோட்டிற்கு முன் காத்திருக்க வேண்டும், மற்றும் பச்சை நிற விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.

2) மஞ்சள் - கவனி

மஞ்சள் விளக்கு ஒளிரும்போது தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ளலாம் என்பதைக் குறிக்கிறது. எனினும், அதிக கவனத்துடன் மட்டுமே செயல்பட வேண்டும்.

3) பச்சை - செல்

பச்சை நிற அம்புக் குறி அது காட்டும் திசை நோக்கிப் பயணிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

ஊடகத்தின் பங்கு:

குழந்தைகளுக்கு தற்போது ஊடகத்தின் மீது மிகுந்த நாட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் போன்ற ஊடகங்களுக்கு, சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு மிகவும் உள்ளது.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு:

இளம் வயதினருக்கு, சாலைப்பாதுகாப்புக் கல்வியைத் தருவதில் பெற்றோரும் ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர். ஒரு பெற்றோர் போக்குவரத்து விதிகளை மீறும்போது, அந்தக்குழந்தையும் பிற்காலத்தில் தன் பெற்றோரைப் போலவே போக்குவரத்து விதிகளை மீறும். எனவே, பெரியவர்கள் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து முன்மாதிரியாளர்களாக விளங்கவேண்டும்.

தடை செய்ய வேண்டியவை:

குழந்தைகள் காணொலி மற்றும் கணினியில் வாகனத்தை வேகமாக இயக்குவது போன்ற படக்காட்சிகள் காண்பதையோ, விளையாடுவதையோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், அவ்விளையாட்டுகள் பிற்காலத்தில் வாகனங்களை வேகமாக இயக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடையே ஏற்படுத்திவிடும். எனவே அரசு இத்தகைய விளையாட்டுகளை தடை செய்யவேண்டும்.

விழிப்புணர்வு:

குழந்தைப் பருவத்திலிருந்தே போக்குவரத்துக் கல்வியை சுற்றுத்தரவேண்டும். பள்ளிப்பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக போக்குவரத்துக் கல்வி இணைக்கப்பட வேண்டும். கலைத்திட்டத்தில் சாலைப்பாதுகாப்பு தொடர்பான போட்டிகள் நடத்தப்படவேண்டும். வாசகங்கள், கட்டுரைகள் எழுதுதல், படம் வரைதல் போன்ற செயல்களால் சாலைப்பாதுகாப்பினை வலுபெறச் செய்யலாம்.

முடிவுரை:

ஒவ்வொரு நாடும் சாலைகளைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புகருதி விபத்தோ, காயமோ ஏற்படாவண்ணம் சாலைப் பாதுகாப்பு விதிகளை வகுத்துள்ளது. அவற்றை ‌அனைவரும் கடைப்பிடித்து, குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து, விபத்துகள் இல்லா சமுகத்தை உருவாக்குவோம்.

Tags:

#கட்டுரை
#வாழ்க்கை_முறை
#pothu_katturai
#tamil_katturai
#tamil_essay
#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips
#essaywriting
#favourite
#essay
#essayforkids
#easyessay
#kidsenglishessay
#கட்டுரை
#சிலவரிகள்கட்டுரை
#குழந்தைகளுக்கான_கட்டுரை
#குழந்தைகளுக்கானசாலைபாதுகாப்புகட்டுரை
#சாலைபாதுகாப்புகுழந்தைகளுக்கு
#roadsafetyessayintamilforkids
#tamil

Comments